இன்றைய காலகட்டத்தில் வாட்ஸ்-ஆப் ஒரு தகவல் தொடர்பு முறையாகவே மாறிவிட்டது. ஸ்மார்ட்போன்கள் வந்துவிட்ட பிறகு ஒவ்வொருவரும் ‘வாட்ஸ்-ஆப்’பை பயன்படுத்தி வருகின்றனர். ஆனால், ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் இதை பயன்படுத்த முடிவதில்லை. ஏனென்றால், டேட்டா கனெக்ஷன் வவுச்சர் லிமிட் தீர்ந்துவிட்ட பிறகு மீண்டும் ரீசார்ஜ் செய்ய வேண்டியுள்ளது.
உலகம் முழுவதும் படுபாப்புலராகிவிட்ட இந்த வாட்ஸ்-ஆப்பை இண்டர்நெட் இல்லாமலேயே பயன்படுத்தும் வகையில் புதிய சிம்மை தயாரித்து அசத்தியிருக்கிறது இத்தாலியை சேர்ந்த ஒரு மொபைல் நிறுவனம். இந்த சிம்மை பயன்படுத்தி வை-ஃபை, டேட்டா கனெக்ஷன், ரோமிங் இல்லாமல் மெசேஜை அனுப்பலாம். இந்த சிம்மிற்கு ‘வாட்ஸிம்’ என பெயரிடப்பட்டுள்ளது. இந்த அபூர்வ சிம்மை ‘ஜீரோமொபைல்’ நிறுவனத்தின் இயக்குனர் மானுவேல் ஜனிலியா கண்டுபிடித்திருக்கிறார்.
இந்த சிம் எப்படி வேலை செய்கிறது?
‘வாட்ஸிம்’ உலகம் முழுவதிலுமுள்ள 150 நாடுகளில் 400-க்கும் மேற்பட்ட மொபைல் ஆபரேட்டர்களுடன் இணைந்து சேவையை வழங்குகிறது. நீங்கள் ஒரு நாட்டிலிருந்து வேறு நாட்டிற்கு சென்றாலும் உடனடியாக சர்வீஸ் புரொவைடரை ஆட்டோமேட்டிக்காகவே மாற்றிக் கொள்கிறது ‘வாட்ஸிம்’. ஒருவேளை அருகில் ஏதாவது ஒரு நெட்வொர்க்கில் ‘சிக்னல்’ நன்றாக இருந்தால் தானாகவே அந்த நெட்வொர்க்கில் ‘கனெக்ட்’ ஆகிவிடும். இந்த சிம் அதிகம் பயணம் செய்பவர்களுக்கு ஒரு வரப்பிரசாதம். அதைவிட, அவர்கள் தங்களுக்கு அன்பானவர்களுடன் எந்த தடையும் இல்லாமல் ‘வாட்ஸ்-ஆப்’பில் எப்போதும் இணைந்திருக்க முடியும். இதற்கு எந்த ரோமிங் கட்டணங்களும் கிடையாது என்பது கூடுதல் ‘பெனிபிட்’.
‘வாட்ஸிம்’ வாங்க எவ்வளவு செலவாகும்?
இந்த சிம்மின் விலை வெளிநாட்டு பண மதிப்பில் 10 பவுண்டுகள் செலவாகும். அதாவது, இந்திய பண மதிப்பில் ரூ.714. இது ஒரு மாதத்திற்கு மட்டுமல்ல, வருடம் முழுவதும் உலகெங்கிலும் உள்ள நண்பர்களுடன் ‘சாட்’ செய்து மகிழலாம். ‘வாட்ஸிம்’முக்கு மாதாந்திர கட்டணங்களோ, பிக்ஸட் கட்டணங்களோ, எதுவும் கிடையாது. அதுமட்டுமல்ல இது ஒருபோதும் எக்ஸ்பைரி ஆகவே ஆகாது.
போட்டோ, வீடியோ, பாடல்களை இலவசமாக அனுப்ப முடியுமா?
மெசேஜை போல மல்டிமீடியா கண்டென்ட்டு (போட்டோ, வீடியோ, ஆடியோ) பைல்களை இலவசமாக இதில் அனுப்ப முடியாது. அதற்கு தனியாக நாம் ரீசார்ஜ் செய்துதான் ஆக வேண்டும். எனினும், சில கிரெடிட் பாயிண்டுகளை கலெக்ட் செய்து கொண்டால் அதற்கு ஏற்றவாறு இலவசமாக அனுப்ப முடியும். இது ஒவ்வொரு நாட்டிற்கும் வேறுபடும். குறிப்பாக, இந்தியாவில் 150 கிரெடிட்டுகளை கலெக்ட் செய்தால் போட்டோக்களையும், 600 கிரெடிட்டுகளை பெற்றால் வீடியோ மெசேஜ்களையும், 30 கிரெடிட்டுகளை பெற்றால் வாய்ஸ் மெசேஜ்களையும் இலவசமாக அனுப்பலாம். ஆனால், கான்டாக்ட் மற்றும் லொகேஷன் ஷேரிங் செய்வதற்கு எந்த கட்டணமும் இல்லை. அதற்கு கிரெடிட்டுகளும் தேவையில்லை.
Post a Comment