'டிசம்பர் இறுதிக்குள், 'டிஜிட்டல்' தொழில்நுட்பம் அடிப்படையிலான ஒளிபரப்பிற்கு, கேபிள் ஆபரேட்டர்கள் மாற வேண்டும்' என, மத்திய அரசு கெடு விதித்துள்ளது. இதனால், தமிழக அரசு கேபிள், 'டிவி' நிறுவனம், 40 லட்சம் சந்தாதாரர்களை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில், ஒரு சில தனியார் நிறுவனங்கள், கேபிள் தொழிலில் ஆதிக்கம் செலுத்தியதுடன், பொதுமக்கள் மற்றும் கேபிள் ஆபரேட்டர்களிடம் அதிக கட்டணம் வசூலித்து வந்தன. பொதுமக்கள், மாதக் கட்டணமாக, 150 முதல், 250 ரூபாய் வரை செலுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர்.
கட்டாயமக்கியது
இதை தடுக்கும் பொருட்டு, அரசு கேபிள் நிறுவனம், 100 இலவச மற்றும் கட்டண சேனல்களை, மாதம், 70 ரூபாய்க்கு வழங்கி வருகிறது.இதற்கிடையில், சென்னை உள்ளிட்ட நாட்டின் முக்கிய நகரங்களில், 'செட்டாப் பாக்ஸ்' அடிப்படையிலான, 'டிஜிட்டல்' ஒளிபரப்பை, தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான, 'டிராய்' 2012 முதல் கட்டாயமக்கியது. அதற்கான உரிமங்களை, எம்.எஸ்.ஓ., எனப்படும் தனியார் நிறுவனங்களுக்கு வழங்கியது.
ஆனால், 'அரசு கேபிள் நிறுவனம், அரசுக்கு சொந்தமானது என்பதால் டிஜிட்டல் உரிமம் வழங்க முடியாது' என, டிராய் மறுத்தது; இதை எதிர்த்து, தமிழக அரசு வழக்கு தொடர்ந்துள்ளது.
இந்நிலையில், 'டிச., 31 முதல் அனைத்து கிராம பகுதிகளிலும் டிஜிட்டல் ஒளிபரப்பு மட்டுமே இருக்க வேண்டும்' என, டிராய் திட்டவட்டமாக அறிவித்துள்ளது. இதனால், கிராம பகுதிகளில் அரசு கேபிள் வழங்கி வரும், 'அனலாக்' அடிப்படையிலான சாதாரண ஒளிபரப்பு சேவை பாதிக்கப்படும்.அதற்கு, தங்களது முக்கிய சேனல்களை, தனியார் தொலைக்காட்சி நிறுவனங்கள் வழங்கமறுக்கும் நிலையும் ஏற்படும். இதன் காரணமாக, டி.டி.எச்., என்ற, 'டிஷ் ஆன்டெனா' மூலமான நேரடி ஒளிபரப்பு சேவையை மக்கள் நாடும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து, தமிழக கேபிள் ஆபரேட்டர்கள் நலச் சங்க தலைவர் தாமோதரன் கூறியதாவது:
தமிழகத்தில், 1.7 கோடி முதல், 2 கோடி கேபிள் சந்தாதாரர்கள் உள்ளனர். அவர்களில், 60 முதல், 70 லட்சம் பேர், ஏற்கனவே, டி.டி.எச்.,க்கு மாறி விட்டனர். மேலும், 20 லட்சம் பேர், சில தனியார் எம்.எஸ்.ஓ.,க்களிடம் டிஜிட்டல் தொழில்நுட்பத்திற்கான, 'செட்டாப் பாக்ஸ்'களை பெற்றுள்ளனர்.
அரசு கேபிள், 'டிவி' நிறுவனத்திடம், 70 லட்சம் சந்தாதாரர்கள் உள்ளனர். 'அந்நிறுவனம் தரும் சேவையை நாங்கள் தருகிறோம்; டிச., 31க்குள், அனைத்து சந்தாதாரர்களும் செட்டாப் பாக்ஸ் முறைக்கு மாற வேண்டும்' என, டிராய் கூறிவிட்டது.
அதனால், ஜனவரி முதல், தனியார் தொலைக்காட்சி நிறுவனங்கள், பெரும்பாலான சேனல்களை எங்களுக்கு வழங்காது என தெரிகிறது. எனவே, அரசு கேபிள் நிறுவனத்தில் இருந்து, 40 லட்சத்திற்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள்,டி.டி.எச்.,க்கு மாறும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
அப்படி மாறினால், தமிழக அரசுக்கு பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படும். மேலும் இத்தொழிலை நம்பியுள்ள, 40 ஆயிரம் ஆபரேட்டர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும். எனவே, தமிழக அரசு, நல்ல முடிவு எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
அரசுக்கு இழப்பு!
தமிழகத்தில் தற்போது, 70 லட்சம் பேர், அரசு கேபிள் சந்தாதாரர்களாக உள்ளனர். ஒவ்வொருவரும் மாதக் கட்டணமாக, 70 ரூபாய் செலுத்துகின்றனர். இதில், கேபிள் ஆபரேட்டர்கள், ஒரு இணைப்புக்கு, 20 ரூபாய் வீதம் அரசுக்கு செலுத்துகின்றனர். இதன் வாயிலாக, அரசுக்கு மாதந்தோறும் கணிசமான வருவாய் கிடைக்கிறது.ஜனவரிக்கு பின், இவர்கள் அனைவரும் அரசு கேபிள், 'டிவி'யை விட்டு விலகினால், அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்படும்.
எதிர்பார்ப்பு!
சென்னையில், 'எஸ்.சி.வி., - டி.சி.சி.எல்., அக் ஷயா என, 10 எம்.எஸ்.ஓ.,க்கள், டிஜிட்டல் ஒளிபரப்பை வழங்கி வருகின்றன. ஆனால், தமிழகத்தில், 250 பேர் இதற்கான உரிமத்தை மத்திய அரசிடம் பெற்றுள்ளனர். அவர்களில் பலர், அரசு கேபிள் நிறுவனத்துடன் இணைந்து சாதாரண ஒளிபரப்பை வழங்கி வருகின்றனர்.'ஒருவேளை, தமிழக அரசுக்கு எதிராக தீர்ப்பு வந்துவிட்டால், எம்.எஸ்.ஓ., உரிமம் வாங்கி இருக்கும் எங்களை விடுவித்து, எங்கள் குடும்பங்களை வாழ வைக்க வேண்டும்' என, அவர்கள் தெரிவித்துள்ளனர்.
-நன்றி-
-தினமலர் -
Post a Comment