இலங்கை சிறிய தீவாக இருந்தபோதிலும் 2500 ஆண்டுகளுக்கு மேற்பட்ட நீண்டகால வரலாற்றைக் கொண்டதாகும்.
இலங்கையின் காலத்தால் முந்திய வரலாற்று நூலாகக் கருதப்படும் மகாவம்சத்தின்படி இலங்கையின் வரலாறு கிமு 6ம் நூற்றாண்டு அளவில் இந்தியாவின் கலிங்க நாட்டிலிருந்து துரத்திவிடப்பட்ட அந்நாட்டு இளவரசனான விஜயன் என்பவன் தனது தோழர்கள் எழுநூறு பேருடன் இலங்கையில் வந்து இறங்கியதுடன் ஆரம்பமாகின்றது.
எனினும் இதற்கு முன்னரே இயக்கர், நாகர் ஆகிய இரண்டு இனத்தவர்கள் இலங்கையில் வாழ்ந்தது பற்றியும், அவர்கள் இங்கே அரசமைத்து ஆண்டது பற்றியதுமான குறிப்புக்களும் மகாவம்சத்தில் காணப்படுகின்றன.
தொடக்கத்தில் இந்துக்களாக இருந்த இவர்களிடையே மகிந்த தேரரால் கிமு 3ம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் பௌத்தம் அறிமுகம் செய்யப்பட்டது.
இதைத் தொடர்ந்து பெருமைக்குரிய நாகரிகம், அனுராதபுரம் (அரசு கிமு 200 இலிருந்து கிபி 1000 வரை), பொலன்னறுவை (அரசு கிபி 1070 இலிருந்து கிபி 1200 வரை), ஆகிய இடங்களில் வளர்ச்சியடைந்தன.
பொலன்னறுவையின் வீழ்ச்சிக்குப் பின்னர் இலங்கையில் பல்வேறு இராச்சியங்கள் உருவாகின. இலங்கையின் வடபகுதியின் பண்டைய வரலாறு பற்றி இலங்கை வரலாற்று நூல்களில் அதிக தகவல்கள் இல்லை.
எனினும் 14ம் நூற்றாண்டுக்குப் பின்னரே இலங்கையின் வடபகுதியில் இருந்த தமிழர் தனி அரசு பற்றிய ஆதாரங்கள் கிடைக்கப் பெறுகின்றன.
யாழ்ப்பாண இராச்சியம் என்று வழங்கப்பட்ட இவ்வரசு ஆரியச் சக்கரவர்த்திகள் என அழைக்கப்பட்ட வம்சத்தினரால் ஆளப்பட்டு வந்தது.
போர்த்துக்கீச கலபதி டொன் லொரேன்கோ டி அல்மேதா தலைமையில் 1505யில் புறப்பட்ட கப்பல் புயலில் சிக்கித்தவித்து பின்னர் கொழும்பு கரையை அடைந்தது.
அங்கே முதலில் வர்த்தக தளத்தை அமைத்த போர்த்துக்கீசர், பின்னர் அரசியல் உட்பூசல்களை பயன் படுத்தி தமது பலத்தை விஸ்தரித்து கொண்டனர்.
1580 போர்த்துக்கீசத் தளபதி கோட்டே மன்னனுக்கு வாரிசு இல்லாத காரணத்தை பயன்படுத்தி இலங்கையை போர்த்துக்கீச மன்னன் பெயரில் உயில் எழுதிக்கொண்டான்.
பின்னர் 1597 கோட்டே மன்னன் இறக்க இலங்கையின் கரையோரம் போர்த்துக்கீசர் வசப்பட்டது. கண்டி இராசதானியுடன் 1638 இல் செய்யப்பட்ட ஒப்பந்தத்தின் காரணமாக ஒல்லாந்தர் சிறிது சிறிதாக போர்த்துக்கீசர் வசமிருந்த கரையோரப் பகுதிகளைக் கைப்பற்றினர்.
1796 இல் ஒல்லாந்தர் ஆங்கிலேய கப்பல்களை திருகோணமலை துறைமுகத்தில் தரிக்க இடமளிக்காததால் ஆங்கிலேயர் முதலில் திருகோணமலையையும் பின்னர் மற்றைய இலங்கை கரையோர பகுதிகளையும் கைப்பற்றினர்.
ஒல்லாந்தர் 1801 இல் பிரித்தானியருடன் செய்த ஒப்பந்தத்தின் மூலம் ஆங்கிலேயருக்கு இலங்கையைக் கொடுத்தனர். ஆங்கிலேயர் தமிழரசனுக்கும் சிங்கள பிரதானிகளுக்கும் இடையில் இருந்த பகையை பயன்படுத்தி அதுவரை இலங்கையின் நடுப் பகுதியில், போர்த்துக்கீச, ஒல்லாந்த ஆட்சிகளுக்கு உட்படாது தனியரசாக இருந்து வந்த கண்டி இராசதானியையும் 1815 யில் தமது சூழ்ச்சியால் கைப்பற்றி முழு இலங்கையையும் தங்கள் ஆட்சிக்குள் கொண்டுவந்தனர்.
ஆங்கிலேயரின் 133 ஆண்டுகால ஆட்சிக்குப் பின்னர், பெப்ரவரி 4, 1948இல் இலங்கை விடுதலை பெற்றது.
Post a Comment