சூப்பர் சிங்கர் போட்டியில் சினிமா பிரபலம் என்றல்ல... யார் வந்தாலும் சேர்த்துக்கொள்வோம். அவர்கள் எவ்வளவு பிரபலமாக இருந்தாலும் பிரச்சினையில்லை என்று கூறியுள்ளது விஜய் டிவி.
இந்த சேனலில் சமீபத்தில் நடந்து முடிந்த சூப்பர் சிங்கர் போட்டியில் 10க்கும் மேற்பட்ட படங்களில் பாடல் பாடிய ஆனந்த் அரவிந்தாக்ஷன் என்ற கேரள இளைஞருக்கு முதலிடம் தந்து ரூ 75 லட்சம் பரிசும் கொடுக்கப்பட்டது.
புதிய குரல் தேடல் என்று அறிவித்துவிட்டு, ஏற்கெனவே சினிமாவில் பிரபலமான ஒருவரை முதலிடத்துக்கு தேர்வு செய்தது ஏன் என்று கடும் விமர்சனங்கள் கிளம்பின. இதனால் விளக்க அறிக்கை வெளியிட்ட விஜய் டிவி, "ஆரம்பத்தில் புதியவர்களை மட்டும் தேர்வு செய்தது உண்மைதான். ஆனால் இடையில் அந்த நிபந்தனையை நீக்கிவிட்டோம்," என்று கூறியிருந்தது.
அப்படியெனில் யார் வேண்டுமானாலும், சினிமாவில் எவ்வளவு பிரபலமாக இருந்தாலும் இந்தப் போட்டியில் பங்கேற்கலாமா? என்ற கேள்வி எழுந்தது. இந்தக் கேள்விக்கு விஜய் டிவியின் தலைமை நிகழ்ச்சி அலுவலர் பிரதீப் மில்ராய் அளித்துள்ள பதிலில், "சூப்பர் சிங்கர் தலைப்பை பிரதானமாகக் கருதி யார் வேண்டுமானாலும் நிகழ்ச்சியில் பங்கேற்கலாம். ஒரு முறை பங்கேற்றவர் மீண்டும் பங்கேற்கக் கூடாது. மற்றபடி அவர் எந்த அளவு பிரபலமாக இருந்தாலும் இந்தப் போட்டியில் பங்கேற்கலாம்," என்றார்.
எஸ்பிபி, சித்ரா, ஹரிஹரன் போன்றவர்கள் வந்தாலும் ஏற்பீர்களா? என்ற கேள்விக்கு, "இன்னார் என்றில்லை. எங்களை மதித்து வரும் யாரும் பங்கேற்கலாம்!" என்று பதிலளித்துள்ளார்.
Post a Comment