"டப்பிங் சீரியல்களை ஒளிபரப்பி எங்கள் வேலை வாய்ப்பை பறிக்காதீர்கள்" என்று ஒரு புறம் சின்னத்திரை நட்சத்திரங்களும், தொழில்நுட்ப கலைஞர்களும் போராட்டம் நடத்தி வருகிறார்கள். ஆனால் இன்னொரு புறம் முன்னணி சேனல்கள் போட்டிபோட்டுக் கொண்டு இந்தி சீரியல்களை இறக்குமதி செய்து ஒளிபரப்பிக் கொண்டிருக்கின்றன. முன்னணி சேனல் ஒன்று ஒளிபரப்பி வரும் நாகினி தொடருக்கு பெரும் வரவேற்பு கிடைத்திருப்பதையொட்டி அதே போன்ற ஒரு பேண்டஸி திகில் தொடரை ஒளிபரப்ப இருக்கிறது விஜய் டி.வி. இந்தியில் பிரபலமான திகில் தொடரை வாங்கி அதனை மாய மோகினி என்ற பெயரில் டப் செய்து ஒளிபரப்ப இருக்கிறது.
இரண்டு பெண்கள் முக்கிய கதாபாத்திரம். ஒருவனை தீவிரமாக காதலிக்கும் பெண் எதிர்பாராத விதமாக இறந்து விடுகிறார். ஆனால் அவளின் ஆன்மா அந்த இளைஞனையே சுற்றிச் சுற்றி வருகிறது. அந்த இளைஞனுக்கு திருமணமாகிறது. மனைவியின் ஆன்மா மூலம் அந்த இளைஞனோடு வாழ துடிக்கிற பெண்ணின் கதை. "உள்ளே உருவம், வெளியே அருவம் விளங்க முடியாத அதிசயம் நான்" என்பதுதான் அந்த கேரக்டரின் தாராக மந்திரம். "அவள் தொடுவாள் நான் பரவசமாவேன், அவள் உடல் நான் உயிர்" என்பது கேரக்டரின் தன்மை.
மாயமோகினி வருகிற 5ந் தேதி விநாயகர் சதுர்த்தி முதல் ஒளிபரப்பாகிறது. ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் சனிக்கிழமை வரை ப்ரைம் டைமான இரவு 7 மணிக்கு ஒளிப்பாகிறது. இந்த மாயமோகினி அந்த நாகினியை வெல்வாளா என்பது ஒரு சில வாரங்களில் தெரிந்துவிடும்.
Post a Comment