கொரோனா காரணமாக மக்கள் வீடுகளை விட்டு கூட வெளியே செல்ல முடியாத சூழ்நிலை உள்ளதால் அவர்கள் பொழுதுபோக்கிற்காக அதிகம் நம்பி இருப்பது தொலைக்காட்சிகளை தான். ஆனால் அந்த அளவுக்கு மக்களுக்கு பொழுதுபோக்காக இருந்து வரும் டிவி தொடர்கள் மற்றும் நிகழ்ச்சிகளின் ஷூட்டிங்கை மேற்கொள்ள முடியாமல் அனைத்து தொலைக்காட்சிகளும் திணறி வருகின்றன.
அதனால் ஒளிபரப்பாகி வந்த அனைத்து சீரியல்களும் நிறுத்தப்பட்டு தற்போது பழைய சீரியல்கள் மற்றும் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வந்தன. பல வருடங்களுக்கு முன்பு பார்த்த சீரியல்களை மீண்டும் மக்கள் பார்த்து வருகின்றனர்.
இந்நிலையில் கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளை படிப்படியாக தளர்த்தப்பட்டு வருவதனால் சீரியல் ஷூட்டிங் மீண்டும் துவங்கி உள்ளது. பாதுகாப்பு நடவடிக்கைகளை கடைபிடித்து தான் இந்த ஷூட்டிங் நடத்தபட்டு வருகிறது என தெரிகிறது. இந்நிலையில் சீரியல்களின் புதிய எபிசோடுகளினை எப்போது மீண்டும் ரசிகர்கள் பார்க்கலாம் என்ற தகவல்களை தொலைக்காட்சி சேனல்கள் வெளியிடாமல் இருந்தன.
தற்போது சன் டிவி முதல் முறையாக அது பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில் வெளியிட்டுள்ள அறிவிப்பில் சன் டிவி கூறியிருப்பதாவது..
"உங்கள் அபிமான மெகாத் தொடர்கள், புதிய திருப்பங்களோடு, உங்கள் உள்ளத்திலும் இல்லத்திலும் புத்தம் புதிய எபிசோடுகளுடன் வருகிறது.. ஜூலை 27 முதல், உங்கள் சன் டிவியில்.." என குறிப்பிட்டுள்ளனர்.
அதனால் கொரோனாவுக்கு முன்பு பரபரப்பாக ஓடிக்கொண்டிருந்த சீரியல்களின் புதிய அத்தியாயங்களை இன்னும் ஒருவாரத்தில் மீண்டும் பார்க்கலாம் என ரசிகர்கள் காத்திருக்கின்றனர். சித்தி 2, நாயகி, கல்யாண வீடு போன்ற சீரியல்களை மீண்டும் பார்க்க காத்திருப்பதாக ரசிகர்கள் ட்விட்டரில் தெரிவித்து வருகின்றனர்.
இது போல மற்ற தொலைக்காட்சிகளும் அதிகாரபூர்வ அறிவிப்புகளை வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் கொரோனா தொற்று காரணமாக ஷூட்டிங் நடத்துவதில் பல்வேறு சிக்கலைகளையும் குழுவினர் சந்தித்து வருகின்றனர். அதில் முக்கியமானது நடிகர்களை மீண்டும் ஒன்றிணைத்து ஷூட்டிங் நடத்துவதில் உள்ள சிக்கல் தான். பெரும்பாலும் தமிழ் சின்னத்திரையில் கேரளா, கர்நாடகா போன்ற மாநில நடிகைகள் தான் ஹீரோயின்களாக நடிக்கின்றனர். அவர்கள தங்கள் சொந்த ஊருக்கு சென்று விட்டதால் மீண்டும் அவர்கள் சென்னை வர முடியாத சூழ்நிலை தான் உள்ளது.
அப்படி வந்தாலும் இ-பாஸ், குவாரன்டைன் உள்ளிட்ட சிக்கல்கள் உள்ளன. அதனால் பல முன்னணி சீரியல்களில் நடிக்கும் நடிகர்கள் அதில் இருந்து விலகுவதாகவும் கடந்த சில நாட்களாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளது.
சன் டிவியின் முக்கிய சீரியல்களில் ஒன்றான அக்னி நட்சத்திரம் தொடரில் வில்லியாக அகிலா என்ற கதாப்பாத்திரத்தில் நடித்து வந்த மெர்ஷினா தான் கேரளாவில் இருப்பதால் இனி மீண்டும் சென்னை வர முடியவில்லை அதனால் வேறு ஒரு நடிகை அந்த ரோலில் இனி நடிப்பார் என அறிவித்து இருந்தார். இது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.
"வெளியில் செல்வது பாதுகாப்பற்ற ஒன்றாக இருக்கிறது. அதனால் என்னால் வேலைக்காக வாராவாரம் ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு சென்று வர முடியாது. ஏனென்றால் சென்னையில் நிலைமை மிக மோசமாக இருக்கிறது. திருவனந்தபுரத்திலும் அப்படித் தான் இருக்கிறது. அதனால் அக்னி நட்சத்திரம் தொடர் விரைவில் மீண்டும் ஒளிபரப்பாகும். ஆனால் அதில் அகிலாவாக வேறு ஒரு புதிய நடிகை இருப்பார். பார்வையாளர்கள் அனைவருக்கும் நன்றி என அவர் கூறி இருந்தார்.
மேலும் சித்தி 2 சீரியலில் நான்கு நடிகர்கள் மாற்றப்பட்டு உள்ளனர். பொன்வண்ணனுக்கு பதில் இனி நிழல்கள் ரவி நடிக்கவுள்ளார்.
Post a Comment